January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“வடக்கு மாகாண மக்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்; இராணுவத்தளபதி

வட மாகாண மக்கள் கொரோனா சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகுவதால் நாம் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்று கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட அவர் கிருஷ்ணபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற கொரோனா வைத்தியசாலையின் பணிகளைப் பார்வையிட்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

“சமூகப் பரவல் என்பது அதன் அர்த்தத்தின்படி என்னவென்றால் தொற்றானது எவரிடமிருந்து ஒருவருக்குத் தொற்றியது என்பது தெரியாத நிலையாகும். இதுவரையில் நோயாளியாக இனங்காணப்படும் ஒவ்வொருவரும் இன்னொரு நோயாளியுடன் ஏதோவகையில் தொடர்புபட்டவர்களாகவே உள்ளனர். இதனால்தான் வைத்தியர்கள் இதுவரை சமூகப் பரவல் இல்லை என்று கூறுகிறார்கள். அதை நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

சமூகப் பரவலா அல்லது தொடர்புகள் உள்ளதா? இல்லையா? என்பது இங்கு முக்கியம் அல்ல. எமது நாட்டில் தற்போது கொரோனா தொற்று உள்ளதால் நாம் அனைவரும் மிக அவதானமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதே மிக முக்கியமானதாகும்.

நாட்டு மக்கள் அனைவரும் சுகாதாரப் பிரிவினரது அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதன் மூலம் கொரொனாவைக் கட்டுப்படுத்துவதற்குத் தமது பாரிய பங்களிப்பை வழங்க வேண்டும்.

வடக்கு மாகாண மக்கள் இந்தச் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகுவதால் நாம் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். அவர்களை நிச்சயமாக நாம் பாராட்டுகின்றோம்.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் சில நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அங்குள்ள மக்களுக்கு எம்மால் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சுகாதாரத்துறையினர் தெளிவாக மக்களுக்கு வழிகாட்டல்களை மேற்கொண்டுள்ளனர் என்று நான் நினைக்கிறேன். அந்த வழிகாட்டல்களை அனைவரும் கடைப்பிடிக்கும் பட்சத்தில் இந்தப் பிரதேசத்தில் கொரோனா நோயே இருக்கமாட்டாது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.