சட்டவிரோதமான முறையில் இலங்கையில் இருந்து கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 91 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாரவில பகுதியிலும் மற்றும் அதனை அண்மித்த கடற்பகுதியிலும் செவ்வாய்க்கிழமை இரவு கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போதே இவர்கள் கைதாகியுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது மாரவில பகுதியில் இருந்து படகில் செல்வதற்காக விடுதி ஒன்றில் தங்கியிருந்து 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடற்பகுதியில் படகில் மறைந்திருந்த நிலையில், 58 ஆண்கள், 5 பெண்கள், 7 சிறுவர்கள் அடங்கலாக 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மரவில பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மேலதிக விசாரணைக்காக கடற்படையினரால் கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.