முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ பதவி விலகுவதற்கு தயாராகி வருவதாக கொழும்பு ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.
இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் எம்.பிக்களாக பதவி வகிக்க முடியாத வகையிலான ஏற்பாடுகளை 21 ஆவது திருத்தத்தில் உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த திருத்தத்தை நிறைவேற்ற முன்னர் அவர் பதவி விலக முடிவு செய்துள்ளதாக அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர் பதவி விலகியதும், இவரின் ஆசனத்திற்கு இலங்கையில் பிரபல கோடீஸ்வர வர்த்தகரான தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்பின்னர் தம்மிக்க பெரேராவுக்கு நாட்டின் பொருளாதார விடயங்கள் தொடர்பான முக்கிய அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாகவும் கொழும்பு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த செய்திகள் தொடர்பில் பஸில் தரப்பில் இருந்து இதுவரையில் பதிலளிக்கப்படவில்லை.