உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் இதற்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட கடன் பெறும் எல்லையான 3000 பில்லியன் ரூபாவை மேலும் 1000 பில்லியன் ரூபாவால் அதிகரிக்க பாராளுமன்றத்தில் இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
1923ஆம் ஆண்டு 08ஆம் இலக்க உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளை சட்டம் மற்றும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு அமைய, பாராளுமன்ற தீர்மானத்தினால் அனுமதிக்கப்படுகின்றன தொகையை விஞ்சாது, இலங்கை அரசாங்கத்தின் திறைசேரி உண்டியல்களால் கடன் பெற்றுக் கொள்ளப்படும்.
இதற்கமைய 2021ஆம் ஆண்டில் திறைசேரி உண்டியர்களை வெளியிடுவதன் மூலம் பாராளுமன்றத்தினால் இறுதியாக அனுமதியளிக்கப்பட்ட கூடிய கடன் எல்லையாக 3000 பில்லியன் ரூபாவாக அமைந்ததுடன், 2022 ஏப்ரலில் இறுதியாக செலுத்தப்படவேண்டிய திறைசேரி உண்டியல்களின் பெறுமதி 2,860 பில்லியன் ரூபாவாகும்.
கொவிட் 19 தொற்றுநோய் சூழல் மற்றும் ஏனைய காரணங்களால் அரசாங்கத்தின் வருமானம் எதிர்பார்த்த அளவை விட மிகவும் குறைவாக அமைந்ததுடன், 2021ஆம் ஆண்டு 30ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட செலவினங்களுக்கு கூடுதலாக கடன் சேவை கொடுப்பனவுகள், குறிப்பாக தொடர்ச்சியான செலவுகள் மற்றும் நலன்புரிச் செலவுகளுக்காக கடன் எல்லையை அதிகரிப்பதற்கான காரணமாக அமைந்தன.
மேலும், இலங்கையின் கடன் தரமதிப்பீடு குறைக்கப்பட்டதன் காரணமாக வெளிநாட்டு மூலங்களிலிருந்து நிதியைத் திரட்டுவதற்கு சர்வதேச சந்தைகளுக்கான அணுகலை இழந்துள்ளதால், நிதியமைச்சுக்கு உள்நாட்டு மூலங்களிலிருந்து கடன்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அத்துடன், 1969ஆம் ஆண்டு 01ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2022.04.09ஆம் திகதிய 2274/42 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டு 06ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிக்கு இன்று பாராளுமன்றத்தின் அனுமதி கிடைத்தது.
கைத்தொழில் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கத்துடன் நிதி அமைச்சினால் அடையாளம் காணப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியைக் குறைப்பதன் மூலம் அந்நிய செலாவணி வெளியேற்றத்தை குறைப்பதற்கு இந்த ஒழுங்குவிதியின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கமைய, தெரிவுசெய்யப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்களில் 369ஐ இறக்குமதி செய்வதற்கான உரிமம் தொடர்பான பிரேரணையை அமுல்படுத்துவதற்காக 09.04.2022 திகதியிடப்பட்ட 2274/42 வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
அதேநேம், அத்தியாவசிய அரச சேவைகளைத் தடைகளின்றி தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்வதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் 695 பில்லியன் ரூபா குறைநிரப்பு மதிப்பீடு இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இது தொடர்பான விவாதம் நாளை நடைபெறும்.