இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்யாவின் ‘ஏரோபிளொட்’ விமானத்தை மொஸ்கோவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானம் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் இடைநிறுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் நகர்த்தல் பத்திரமொன்றை முன்வைத்து விடுத்த வேண்டுகோளை கருத்திற்கொண்டு நீதிமன்றம் இன்று இந்த தடை உத்தரவினை இடைநிறுத்தியிருந்தது.
இதன்படி இன்று மாலை 6 மணிக்கு முன்னர் அந்த விமானத்தை மொஸ்கோவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
‘ஏரோபிளொட்’ விமான சேவை நிறுவனம் மற்றும் அதனுடன் வர்த்தக நடவடிக்கைகளை தொடரும் நிறுவனத்திற்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 2ஆம் திகதி இலங்கை வந்த குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டது.
தமது விமானம் இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டமைக்கு ரஷ்யா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், அது தொடர்பில் இலங்கைக்கான ரஷ்ய தூதுவரிடம் ரஷ்ய வெளிவிவகார அமைச்சு விளகத்தையும் கோரியது.
இதனிடையே குறித்த விமானத்தின் பயணிகள் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறான நிலைமையில் இந்த விடயம் தொடர்பில் ரஷ்யா மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், நேற்றைய தினம் மொஸ்கோவில் இருந்து வெறுமையாக வந்த விமானமொன்று அந்தப் பணிகளை ஏற்றிக்கொண்டு ரஷ்யா பயணமாகியது.
இந்நிலையில் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு நீக்கப்பட்டதை தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த விமானத்தை இன்றைய தினத்தில் நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.