January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை!

2015 ஆம் ஆண்டில் வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி பணம் பெற்றுக்கொண்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பிரசன்ன ரணதுங்கவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 25 மில்லியன் ரூபா அபராதத்தை செலுத்துமாறும் நீதிமன்றம் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஒரு மில்லியன் ரூபா நஷ்ட ஈட்டை செலுத்துமாறும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டில் மேல் மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் மீதொட்டுமுல்லை பிரதேசத்தில் சதுப்பு நிலத்தை நிரப்புவதற்கான அனுமதியை வழங்குவதற்காக அங்கு சட்டவிரோதமாக வசித்தவர்களை வெளியேற்றுவதற்காக குறித்த வர்த்தகரிடம் 64 மில்லியன் ரூபா கேட்டு அச்சுறுத்தியதாக தெரிவித்தே பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்ட போதே அவருக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.