பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் போதுமான அளவு கையிருப்பில் வைத்திருக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
பொருட்களுக்கு தட்டுப்பாடு இருப்பதாகக் காட்டி சில வர்த்தகர்கள் விலையை அதிகரிக்கச் செய்யும் திட்டமிட்ட முயற்சிகளை இதன் மூலம் தடுக்க முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
வணிகம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகள் எதிர்நோக்கும் சவால்களுக்கு விரைவான தீர்வுகளை காண்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
இதன்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
மொத்த சந்தைக்கு வினியோகிக்கப்படும் விவசாய விளைபொருட்களில் ஒரு பகுதியை நேரடியாக கிராம சந்தைக்கும் வழங்க வேண்டும். இதன் மூலம் போக்குவரத்துச் செலவு குறைவடைவதனால், கிராமப்புற நுகர்வோர் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கும், விவசாயிகள் அதிக விலையை பெற்றுக்கொள்ளவும் முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நிலவும் சூழ்நிலையைப் பயன்படுத்தி நியாயமற்ற விலையில் வர்த்தகம் செய்பவர்கள் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் இயங்கும் சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களை தொடர்ந்து செயற்படுத்துவதன் அவசியம் பற்றியும், வர்த்தகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்ய இடமளிக்காமல் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
வணிகம், வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அனுர திஸாநாயக்க, வர்த்தக அமைச்சின் செயலாளர் எஸ்.டி. கொடிகார மற்றும் அமைச்சின் துறைசார் நிறுவனங்களின் தலைவர்களும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.