இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறுபோகத்துக்கான உரங்களை விரைவில் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த உரமானது இந்திய கடனுதவியுடன் வழங்கப்படுவதுடன், இலங்கைக்குக் கிடைத்து 20 நாட்களுக்குள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நீர்ப்பாசனத் துறை எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் தீர்வுகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
உமா ஓயா மற்றும் மொரகஹகந்த திட்டங்களை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்து பெரும்போகத்திற்கான அனுகூலங்களை பெற்றுக் கொடுக்க முடியும் என கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.
மொராண, மஹகல்கமுவ சார் கால்வாய், மஹகோன குளம், விலகண்டிய குளம் மற்றும் கொடிகமுவ குளம் ஆகிய திட்டங்கள் இதற்கு இணையாக ஒரே நேரத்தில் பூர்த்தி செய்யப்பட உள்ளன.
வெளிநாட்டு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களை குறித்த காலத்திற்குள் நிறைவுசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்தார்.
கடந்த மூன்று நாட்களில் மொத்த மின் உற்பத்தியில் 80% நீர் மற்றும் காற்றாலை மின்சாரம் மூலம் தேசிய மின்கட்டமைப்பிற்கு வழங்கப்பட்டமை தெரியவந்துள்ளது.
மிதக்கும் சூரியசக்தி பேனல் திட்டங்களை மேம்படுத்தவும் கூரையில் பொருத்தப்படும் சூரியசக்தி பேனல்களுக்கு வழங்கப்படும் உதவிகளை அதிகரிக்கவும் நுகர்வோரை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.