பிரதமர் பதவி உள்ளிட்ட அரசாங்கத்தை மீளக் கைப்பற்றுவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத்தை மீளக் கைப்பற்றுவதற்கு அந்தக் கட்சிக்குள் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்தில் தற்போதைய பிரதமரின் நியமனம் தொடர்பில் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் சிலர் அதிருப்தி வெளியிட்டுள்ளதாகவும், இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அந்த இடத்தில் இருந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
21 ஆவது திருத்தம் தொடர்பான விடயங்களை அடிப்படையாகக் கொண்டே பிரதமர் ரணில் மீது அவர்கள் அதிருப்தியை முன்வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை கடந்த வாரத்தில் கொழும்பில் நடைபெற்ற கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தின்போது, அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்தின் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கவுள்ளதால், அதற்கு முன்னர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான ஆசனங்களை கொண்டுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு பூரண ஆதரவை வழங்கியுள்ள போதும், அந்தக் கட்சியின் ஆதரவிலேயே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமும் தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.