January 21, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வீரவன்சவின் மனைவி பிணையில் விடுவிக்கப்பட்டார்!

போலித் தகவல்களை முன்வைத்து சட்டவிரோதமான முறையில் இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுகொண்டமை தொடர்பான வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி அவர் 50,000 ரூபா பணப் பிணையிலும் மற்றும் தலா 50,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் அவரை விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுகொண்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்ட போது அவருக்கு இரண்டு வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பு தொடர்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் நீதிமன்றத்தினால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.