November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரச வருவாயை அதிகரிக்க முக்கிய வரிச் சட்டங்களில் திருத்தம்!

அரச வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் வரிச் சட்டங்கள் சிலவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2019 ஆம் ஆண்டிறுதியில் இலகு வரிக்கொள்கையை அறிமுகப்படுத்தி சேர் பெறுமதி வரி, தனிநபர் வருமான வரி, கூட்டு வருமான வரி போன்ற வரிகளில் வரிவீதத்தைக் குறைப்பதற்கும், சேர் பெறுமதி வரி மற்றும் தனிநபர் வருமான வரியை குறைப்பதற்கும் அரசாங்கத்தால் மேற்கொண்ட தீர்மானத்தால் அரச வருமானம் குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளது.
அவ்வாறே, மொத்த தேசிய உற்பத்தி வீதமாக வரவு செலவுப் பற்றாக்குறை மற்றும் அரச கடன் அதிகரிப்பதற்கும் குறித்த தீர்மானம் காரணமாக அமைந்துள்ளது.
இந்நிலைமையின் கீழ் அரச வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் வரிச் சட்டங்களை திருத்தம் செய்வதற்குத் தேவையான சட்டமூலங்களைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைய, 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டம், 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சேர் பெறுமதி வரிச் சட்டம், 2011 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க தொலைத்தொடர்பு அறவீட்டுச் சட்டம், 1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பந்தயங்கள் மற்றும் சூதாட்ட வரிச் சட்டம் மற்றும் 2003 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க நிதி முகாமைத்துவ (பொறுப்புச்) சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களை செய்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.