பண்டாரகம – அட்டலுகம பகுதியில் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 9 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள காணியில் கீரைத் தோட்டம் செய்பவர் என்று கூறப்படுகின்றது.
அட்டுலுகம – எப்பிட்டமுல்ல பகுதியை சேர்ந்த குறித்த சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை முற்பகல் முதல் காணாமல் போயிருந்தார்.
வீட்டிற்குத் தேவையான உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அருகிலுள்ள கடைக்கு சென்றிருந்த சிறுமி வீடு திரும்பியிருக்கவில்லை.
இதனை தொடர்ந்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதை தொடர்ந்து, விசேட பொலிஸ் குழுக்கள் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததுடன், சம்பவம் தொடர்பில் பலரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள அட்டலுகம பள்ளிவாசலை அண்மித்து காணப்படும் சதுப்பு நிலத்திலிருந்து சனிக்கிழமை மாலை சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.
வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு சிறுமியின் உடல் குறித்த சதுப்பு நிலத்தில் மறைக்கப்பட்டிருந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய 4 குழுக்களால் முன்னெடுக்கப்பட்ட நிலையில், பிரதேசத்தில் பலரிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்தனர்.
சிறுமியின் பிரேதப் பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
இவ்வாறான நிலைமையில் 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை சம்பவம் தொடர்பில் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.