November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”சிறுமி ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்”: ஜனாதிபதி

பண்டாரகம – அட்டுலுகம பிரதேசத்தில் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 9 வயது சிறுமி ஆயிஷாவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உறுதியளித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் சிறுமியின் மரணம் தொடர்பில் இரங்கல் செய்தியை வெளியிட்டே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் அந்தப் பதிவில், ”ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவிக்கின்றேன். இந்த கொடூர குற்றத்திற்கு அவரது குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்க நான் உறுதியளிக்கிறேன்.சிறுமி ஆயிஷா சுவர்க்கம் செல்ல எனது பிரார்த்தனைகள்” என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிறுமியின் மரணம் குறித்து விசாரணை இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சிறுமியின் மரணம் கொலையாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுவதாகவும், சம்பவம் தொடர்பில் இதுவரை இருபது பேரிடம் பொலிசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

27 ஆம் திகதி முற்பகல் வீட்டிற்கு அருகில் வர்த்தக நிலையத்திற்கு சென்றிருந்த போது காணாமல் போயிருந்த சிறுமி, 28 ஆம் திகதி மாலை அந்தப் பகுதியில் உள்ள சதுப்பு நிலத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

அவரின் பிரேதப் பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது.