இலங்கை எதிர்கொள்ளப் போகும் உணவுப் பற்றாக்குறை குறித்து விவசாய அமைச்சின் உயரதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று கலந்துரையாடினார்.
போதிய உரம் வழங்கப்படுவதை உறுதி செய்ய 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என்று பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
இவ்வேளையில், வங்கிகள் டொலரை விடுவித்தால் உர நிறுவனங்களுக்கு தேவையான உர அளவுகளை வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விவசாயப் பொருட்களை தடையின்றி வழங்குவதையும் விநியோகிப்பதையும் உறுதி செய்யும் புதிய சட்டமான அத்தியாவசிய விவசாய விநியோகச் சட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்கப் போவதாகவும் இதன் போது பிரதமர் கூறினார்.
உக்ரைனில் இடம்பெற்றுவரும் யுத்தம் காரணமாக உலகமே கோதுமை மற்றும் உரத் தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுத்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
தட்டுப்பாடு அதிகரிக்கும் போது, உடனடியாக தீர்வு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இலங்கையின் உணவு விநியோகம் மோசமடையும் என்று அவர் விளக்கினார்.
நகர்ப்புறங்களில் விவசாயம் செய்யக் கூடிய பயன்பாட்டில் இல்லாத நிலங்களைக் கண்டறியுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.
நாட்டின் நிலைமை மோசமாக இருப்பதாகவும், அதைக் கடக்க வேண்டுமானால் ஒருங்கிணைந்த முயற்சி தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த சந்திப்பில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிர்மல் சிறிபாலடி சில்வா, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.