November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தர்ப்பங்களை வீணடித்துள்ளனர்”

ஆட்சியை தீர்மானிக்கும் அதிகாரங்களை மக்கள் எமக்கு வழங்கியிருந்தால், கணிசமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமக்கான சந்தர்ப்பங்களையும் மக்கள் வழங்கிய அதிகாரத்தினையும் வீணடிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட முக்கியஸத்தர்கள், அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே டக்ளஸ் தேவானந்தா இதனை தெரிவித்துள்ளார்.
“ஆர்ப்பாட்டங்கள், கோசங்கள் போடுவதாலோ அல்லது வெறுப்புத் தன்மையினை வெளிப்படுத்துவதின் ஊடாக இந்த கியூ வரிசை யுகமும் பொருளாதார நிலைமையும் அகன்றுவிட போவதில்லை. பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்கொள்கின்ற மனோநிலமை ஒவ்வொரு மனிதனிடமும் இருக்குமானால் இதுவும் கடந்து போகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது,  ஈ.பி.டி.பி. கட்சியின் செயற்பாடுகள் தொடர்பாக தெளிவுபடுத்திய டக்ளஸ் தேவானந்தா, தொடர்ச்சியாக ஆட்சியில் பங்கேற்கின்ற போதிலும் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்திகளாக தாம் இருந்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சிக் காலத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்திகளாக இருந்த கூட்டமைப்பினர், தமது ஆட்சிக் காலத்தில் எதையுமே செய்யாத நிலையில், தற்போது ஈ.பி.டி.பியை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.