அத்தியாவசிய மருந்துகள், உணவுப் பொருட்கள் விநியோகம் மற்றும் எரிபொருள் இறக்குமதி போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துவதற்கு நட்பு நாடுகளின் ஒத்துழைப்பு இலங்கைக்கு உடனடியாகத் தேவைப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் டோக்கியோவில் இன்று நடைபெற்ற, ஆசியாவின் எதிர்காலம் (Nikkei) தொடர்பான 27ஆவது சர்வதேச மாநாட்டில் காணொளித் தொழில்நுட்பத்தின் ஊடாக உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடாகும். தற்போதைய தேசிய நெருக்கடிக்கான தீர்வுகளை அதே ஜனநாயக கட்டமைப்பிற்குள் அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜப்பான் இலங்கையின் முக்கிய அபிவிருத்தி பங்காளியாகும். ஜப்பானில் இருந்து நிதியுதவி வழங்குவது தொடர்பாக நடைபெற்று வரும் கலந்துரையாடல்கள் விரைவில் முடிவடையும் என நம்பப்படுகிறது. அதேபோன்று பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மைக்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஜப்பான் ஆதரவளிக்கும் என்று ஜனாதிபதி இதன்போது நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு சாத்தியமான உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்து நட்பு நாடுகளிடமும் கேட்டுக்கொண்டார்.
இந்த மாநாட்டில் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் கல்விமான்கள் கலந்துகொண்டு பிராந்திய பிரச்சினைகள் மற்றும் உலகில் ஆசியாவின் பங்கு பற்றிய இலவச ஆலோசனைகளை மாநாட்டில் முன்வைத்தார்கள்.