File Photo
மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
நேற்று மாலை மகிந்த ராஜபக்ஷவின் கொழும்பிலுள்ள வீட்டுக்கு சென்றுள்ள குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அவரிடம் 3 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலிமுகத்திடலில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் மீதான தாக்குதல், அதற்கு முன்னர் மகிந்த தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னர் மே 9 ஆம் திகதி அலரிமாளிகையில் பிரதமர் தலைமையில் ஆதரவாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து அதில் கலந்துகொண்டிருந்த குழுவொன்று காலிமுகத்திடல் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறைகள் வெடித்ததுடன், எம்.பிக்கள் பலரின் வீடுகள் தாக்குதல்களுக்கு இலக்காகியிருந்தன.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வரும் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நேற்றைய தினம் மகிந்த ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.