கொழும்பு தொடர்மாடி குடியிருப்புகளில் குறைந்த வருமானமுடைய மக்களுக்கு சமைத்த உணவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர், பாராளுமன்றத் உறுப்பினர் மனோ கணேசன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமருக்கு நேரடியாக கடிதமொன்றை அனுப்பி மனோ கணேசன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி நிலைமையில் எரிவாயு, மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டால் கொழும்பு மாநகரத்தில் நாளாந்த வருமானம் பெற்று வந்த குடும்பங்கள், ஒருவேளை உணவுமின்றியும், உணவு சமைக்க வழியுன்றியும் தவிக்கிறார்கள் என்று மனே கணேசன் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, வடகொழும்பின் பின்தங்கிய நகர தோட்ட குடியிருப்புகளில் வாழும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களுக்கு பங்கீட்டு அட்டைகள் வழங்கி, சமைத்த உணவு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மனோ கணேசன் பிரதமரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்காக, கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள பாரிய சமையலறை மற்றும் கொழும்பு மாநகரசபைக்கு சொந்தமான பயன்படுத்தபடாத சமையலறைகள் ஆகியவை பயன்படுத்தலாம் என்றும், இராணுவ சமையல் பணியாளர்களை பணியில் அமர்த்தி இயல்பு நிலைமை திரும்பும்வரை இந்த திட்டத்தை முன்னெடுங்கள் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்மூலம் இங்கு வாழும் பள்ளி பிள்ளைகள், குழந்தைகள், பெண்கள், வயோதிபர்களின் பசியை ஓரளவாவது போக்கலாம். கொழும்பு மாவட்ட எம்பி என்ற முறையில், எதிரணியில் இருந்தபடி கட்சி பேதமின்றி, இது தொடர்பில் நாம் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் எனவும் அவர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.