மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரித்து கனேடிய பாராளுமன்றத்தில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை இலங்கை வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.
குறித்த தீர்மானம் தொடர்பான பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், அதில் காணப்படும் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக நிராகரிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவிததுள்ளது.
மோதலின் இறுதிக் கட்டத்தின் போது மோதல் வலயங்களில் இருந்த மக்களை மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த மனிதாபிமான நடவடிக்கையின் உண்மையான நிலைமை குறித்து கனேடிய அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருக்கு ஏற்கனவே விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை யுத்தம் முடிவடைந்து 13 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கை தனது நல்லிணக்கச் செயற்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருவதாகவும் இது தொடர்பிலும் கனேடிய அரசாங்கத்திற்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் இனப்படுகொலை என்ற வசனம் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவாகர அமைச்சு, ஐக்கிய நாடுகள் சபை அல்லது ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உட்பட அதன் எந்தவொரு அமைப்புக்களாலும் இலங்கை மோதல்கள் தொடர்பாக குறித்த சொற்பிரயோகம் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை என்பதை அரசாங்கம் மீண்டும் வலியுறுத்துகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கான சவால்களை இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் சர்வதேச சமூகத்தினர் உதவ வேண்டிய நேரத்தில் கனேடிய பராளுமன்றத்தால் இத்தகைய தவறான தீர்மானம் தொடர்பில் இலங்கை கவலையடைவதாகவும் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.