இலங்கையில் நபரொருவர் தம்வசம் வைத்திருக்கக் கூடிய வெளிநாட்டு நாணயத்தாள்களின் அளவை குறைப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இதுவரை காலம் 15,000 அமெரிக்க டொலர்கள் வரையில் கைவசம் வைத்திருக்க முடியுமாக இருந்தது.
இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு அந்த தொகையை 10,000 அமெரிக்க டொலர்கள் வரையில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி எவரேனும் இதற்கு மேலதிகமாக வெளிநாட்டு நாணயத்தை வைத்திருந்தால் அவற்றை வெளிநாட்டுக்கணக்கில் வைப்புச்செய்வதற்கோ அல்லது அவற்றை ரூபாவாக மாற்றுவதற்கோ இருவார கால அவகாசம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த அளவுக்கு மேலதிக வெளிநாட்டு நாணயத்தை வங்கியில் வைப்புச் செய்யாமல் கைகளில் வைத்திருப்பவர்கள், அந்த பணம் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கொண்டு வரும் வெளிநாட்டு நாணயத் தாள்களை மூன்று மாதங்கள் வரையில் வைத்திருக்க முடியும் என்றும், அதன் பின்னர் அவர்கள் அவற்றை வைத்திருக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறிப்பிட்ட அளவுக்கு மேலதிகமாக வெளிநாட்டு நாணயத் தாள்களை வைத்திருந்தால் அவர்களிடம் தண்டப்பணம் அறவிடப்படும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.