January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதியை பதவி விலகச் செய்யும் தீர்மானத்துடன் இணங்கும் ரணில்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை பதவி விலகச் செய்யுமாறு வலியுறுத்தும் தீர்மானங்களுக்கு தான் இணங்குவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் மேலதிக நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சி சார்பற்ற அரசாங்கத்தை உருவாக்குவது மற்றும் நாட்டைக் கட்டியெழுப்புவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திற்கு பதிலளித்து அனுப்பியுள்ள கடிதத்திலேயே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையில் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை விரைவில் நிறைவேற்றி, ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் சில மாதங்களுக்கு அர்ப்பணிப்புடனும் கூட்டாகவும் செயற்பட்டு நாட்டை ஸ்திரமான நிலைக்கு கொண்டுவரக் கூடிய வகையில், கட்சி சார்பற்ற அரசாங்கத்தை அமைப்பதற்கு குறித்த எம்.பிக்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.