January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுமந்திரனின் பிரேரணை 119 வாக்குகளால் நிராகரிப்பு!

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி ஜனாதிபதிக்கு எதிராக அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை இன்றே விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்காக சுமந்திரன் எம்.பி முன்வைத்த பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் குறித்தப் பிரேரணையை இன்றைய தினம் சுமந்திரன் முன்வைத்த போது, அதனை எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்‌ஷ்மன் கிரியெல்ல வழிமொழிந்தார்.

எனினும் நிலையியற் கட்டளையை நிறுத்த முடியாது என்றும், ஜனாதிபதி தொடர்பான பிரேரணை நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றால் போன்று எடுத்துக்கொள்ளப்படும் என்றும் சபை முதல்வரான தினேஸ் குணவர்தன அறிவித்தார்.

இதன்போது எழுந்த சர்ச்சை நிலைமையை தொடர்ந்து நிலையியற் கட்டளை இடைநிறுத்த அனுமதி வழங்குவதா? இல்லையா? என்று சபாநாயகர் வாக்கெடுப்பை நடத்தினார்.

இதன்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 119 பேர் அதனை எதிர்த்து அனுமதி வழங்க முடியாது என்று வாக்களித்தனர்.

எனினும் ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.வி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சியை சேர்ந்த 68 பேர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதன்படி நிலையியற் கட்டளை நிறுத்தி ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று சபாநாயகர் அறிவித்தார்.