பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் வாக்கெடுப்பை நடத்துவதற்கு சபாநயகர் மகிந்த யாப்பா அபேவர்தன நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ரோஹிணி கவிரட்னவின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் பரிந்துரைத்த நிலையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அஜித் ராஜபக்ஷவின் பெயரை ஜீ.எல்.பீரிஸ் பரிந்துரைத்தார்.
இதன்போது எதிர்க்கட்சித் தரப்பினர், நேரத்தை வீணடிக்காது எவரேனும் ஒருவரை ஏகமனதாக தெரிவு செய்யுமாறு வலியுறுத்தினர்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்டோரும் வாக்கெடுப்பை நடத்த வேண்டாம் என்றும், வாக்கெடுப்பை நடத்தினால் தாம் சபையில் இருந்து வெளிநடப்பு செய்வோம் என்றும் அறிவித்துள்ளனர்.
எனினும் இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், எவராவது ஒருவர் போட்டியில் இருநந்து விலகாவிட்டால் வாக்கெடுப்பை நடத்தியே ஆக வேண்டும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இதன்படி வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது.
பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஏப்ரல் மாதத்தில் பதவி விலகியதை தொடர்ந்து கடந்த 6 ஆம் திகதி சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவே மீண்டும் தெரிவாகியிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் அவர் பதவி விலகியுள்ளதால், அந்தப் பதவி வெற்றிடமாகியுள்ளது.