எதிர்வரும் வாரத்திற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதில் சவால்களை எதிர்நோக்க வேண்டியேற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாட்டின் தற்போதைய நிதிநெருக்கடி நிலைமை தொடர்பில் திங்கட்கிழமை விரிவான அறிவிப்பு ஒன்றை விடுக்க உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை சம்பந்தமாக உலகவங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ மருந்துகள், உணவு மற்றும் பசளைகளை வழங்குவதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கான ஒத்துழைப்பு குறித்து அந்த அமைப்புகளுடனான கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு இடையில் 21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து நாளை கலந்துரையாடப்படவுள்ளது என்றும் அதன் பின்னர் அது அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு தினங்களாக இடம்பெற்ற சந்திப்புக்களை அடுத்து நாட்டின் தற்போதைய நிதிநெருக்கடி சம்பந்தமாக விரிவான அறிவிப்பு ஒன்றை 16 ஆம் திகதி விடுக்க உள்ளதாகவும் இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.