இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மே 11 ஆம் திகதி காலை 7 மணி வரையில் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் மீதான தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறைகள் வெடித்துள்ள நிலையில், ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த பாதுகாப்பு தரப்பு நடவடிக்கை எடுத்திருந்தது.
ஊரடங்கை இன்று காலை 7 மணியுடன் தளர்த்துவதற்கு எதிர்பார்க்கப்பட்ட போதும், நிலைமையை கருத்திற்கொண்டு அதனை நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் நேற்று முதல் இடம்பெறும் வன்முறை சம்பவங்களில்
நாட்டில் நேற்று முதல் இடம்பெறும் அரச எதிர்ப்பு வன்முறைகளில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 231 பேர் காயமடைந்துள்ளனர்.
பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் நேற்று பிற்பகல் நிட்டம்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.
இதன்போது அத்துகோரள எம்.பி தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவே கூறப்படுகின்றது.
இதேவேளை இங்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் வீரகெட்டிய பிரதேச சபை தலைவரின் இல்லத்திற்கு அருகில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்தனர்.
இதேவேளை நீர்கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டலொன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதேபோன்று தனது வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் போது மாரடைப்பால் இமதும பிரதேச சபையின் தலைவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு அலரிமாளிகைக்கு அருகில் கண்ணீர்ப்புகை பிரயோகத்திற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.