January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இடைக்கால அரசாங்கம்: சட்டத்தரணிகள் சங்கத்துடன் சஜித் தரப்பு கலந்துரையாடல்!

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் இடையே முக்கிய கலந்துரையாடலொன்று இன்று நடைபெற்றது.

சட்டத்தரணிகள் சங்கத்தின் கொழும்பிலுள்ள அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றதுடன், இதில் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் உள்ளிட்ட சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது இடைக்கால அரசாங்கம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள யோசனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இன்றைய நெருக்கடி நிலையிலிருந்து நாடு இயல்பு நிலைமைக்கு திரும்ப வேண்டும் என்றும் இதற்கான ஒத்துழைப்பை வழங்க நாம் தயார் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் வகையில், 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவர அனைத்து தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதியை சந்திப்பதற்கு சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.