January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமர் பதவி: சஜித்துக்கு அழைப்பு – விலகத் தயாராகும் ஹரீன்!

பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு மகிந்த ராஜபக்‌ஷவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை தொடர்ந்து எதிர்வரும் நாட்கள் கொழும்பு அரசியலில் தீர்மானம் மிக்கவையாக இருக்கும்.

ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்று மகிந்த ராஜபக்‌ஷ, மே 9 ஆம் திகதி பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதியினால் பிரதமருக்கு பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் வெளியான தகவல்களையடுத்து அறிவித்தலொன்றை விடுத்த பிரதமரின் செயலாளர், ஜனாதிபதி அவ்வாறு அறிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

ஆனால் பிரதமருக்கு பதவி விலகுமாறு தங்களுக்கு முன்னாலேயே ஜனாதிபதி கூறியதாக அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அமைச்சர்கள் சிலர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இதன்படி பிரதமர் பதவி விலகுவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் புதிய பிரதமர் பதவிக்கு ஒவ்வொருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன.

அதில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நிமல் சிறிபால டி சில்வா, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த தினேஸ் குணவர்தன ஆகியோரின் பெயர்களை எம்.பிக்கள் சிலர் பரிந்துரைத்துள்ளனர்.

இவ்வாறான நிலைமையில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று சட்டத்தரணிகள் சங்கத்தினர் விடுத்துள்ள கோரிக்கைக்கு தாம் இணங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இதனையடுத்து பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி தரப்பில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் சஜித் பிரேமதாச இந்த நேரத்தில் பிரதமராக பதவியேற்கத் தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.

இதேவேளை ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்கலாம் என்று முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்த போதும், அவரை எதிர்க்கட்சியினர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் அனைவருக்கும் பொதுவான ஒருவரை பிரதமராக நியமிக்கலாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த சிலர் கூறியுள்ளனர்.

இதற்கமைய முன்னாள் சபாநாயரான கரு ஜயசூரியவின் பெயரை சிலர் பரிந்துரைத்துள்ளனர். அதற்கு முன்னர் அவரை தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு அனுப்ப யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கரு ஜயசூரிய தயாராக இருந்தால் அவருக்காக தனது பதவியை இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக ஹரீன் பெர்ணான்டோ கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.