இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட்-19 வைரஸ், இதற்கு முன்னர் இருந்ததை விடவும் வீரியமாகப் பரவும் தன்மையைக் கொண்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு, மூலக்கூற்று மருத்துவவியல், ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவு விஞ்ஞானிகள் குழுவொன்றே இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.
பேராசிரியர் நீலிகா மாலவிகே தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், இலங்கையில் இதற்கு முன்னர் காணப்பட்ட கொவிட்-19 வைரஸ் மற்றும் தற்போதுள்ள வைரஸ் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு மற்றும் அவற்றின் விரைவான பரவலில் உள்ள வீரியத் தன்மை போன்றன ஆராயப்பட்டுள்ளது.
அந்தவகையில், இலங்கையில் கந்தகாடு மற்றும் கடற்படை முகாம் போன்ற கொரோனா பரவல் கொத்தணிகளைவிட தற்போது மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளில் பரவும் வைரஸ் அதிக வீரியத் தன்மை கொண்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், இலங்கையில் முன்னரைவிட தற்போது கொவிட்-19 வைரஸ் விரைவாகவும், வீரியமாகவும் பரவிவருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், பிராண்டிக்ஸ், மினுவங்கொடை, கொழும்பு, பேருவளை மற்றும் பேலியகொடை மீன் சந்தை ஆகியவற்றால் தொற்று ஏற்பட்டு மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களிடம் இருந்து 16 வைரஸ் விகாரங்கள் மரபணு வரிசைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
கலாநிதி சந்திமா ஜீவந்தர, கலாநிதி தேஷானி ஜயதிலக, கலாநிதி தினூக ஆரியரத்ன, லக்சிரி கோம்ஸ் மற்றும் தியனாத் ரனசிங்க ஆகியோரும் இந்த ஆய்வுக் குழு உறுப்பினர்களாவர்.
இந்த ஆய்வுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் நிதியுதவி வழங்கியுள்ளது.