January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டீசல் தட்டுப்பாடு தொடர்பில் எரிசக்தி அமைச்சர் பதில்!

பெட்ரோல் விநியோகம் வழமைப் போன்று இடம்பெற்றாலும் டீசல் விநியோகத்தில் சிக்கல்கள் இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தினசரி 4000 மெட்ரிக் டொன் டீசல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்படுகின்ற போதும் தற்போது 1500 மெட்ரிக் டொன் வரையிலான டீசலே விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு காரணம் நுரைச்சோலை அனல் மின்நிலையம் செயலிழந்துள்ளமையே காரணம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் எழுப்பிய கேள்வியொன்று பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் நுரைச்சேலை அனல் மின்நிலையம் செயலிழந்த தொடர்ந்து மற்றைய மின்நிலையங்களுக்கு டீசல் விநியோகத்தை அதிகரிக்க வேண்டியேற்பட்டுள்ளதாகவும், அவ்வாறு விநியோகத்தை அதிகரிக்காவிட்டால் தினசரி மின்வெட்டு நேரம் 8 மணித்தியாலங்கள் வரையில் அதிகரிக்கப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நேரத்தில் வாகனங்களா? மின்சாரமா? என்று பார்த்தால் மின்சாரம் அவசியமானது என்பதனால் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், எனினும் எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு பின்னர் டீசல் விநியோகம் வழமைக்கு திரும்பும் என்று எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.