பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மீண்டும் தெரிவாகியுள்ளார்.
சபையில் இன்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 148 பேர் வாக்களித்துள்ளனர்.
ஏற்கனவே பிரதி சபாநாயகராக பதவி வகித்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, அரசாங்கத்தில் இருந்த சுதந்திரக் கட்சி விலகியதை தொடர்ந்து தான் குறித்தப் பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தார்.
இதன்படி அவர் பதவி விலகியதை தொடர்ந்து அந்தப் பதவி வெற்றிடமாகியுள்ளது.
இதனையடுத்து புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று காலை நடத்தபட்டது.
இதன்போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் மீண்டும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் பெயரை பரிந்துரைத்தனர்.
அதேபோன்று எதிர்க்கட்சி தரப்பினர் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் இம்தியாஸ் பாகீர்மாகாரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
இதில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட ஆளும் கட்சி உறுப்பினர்களும் மற்றும் அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக இயங்கும் கட்சிகளும் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சயை சேர்ந்த 65 பேர் இம்தியாஸ் பாகீர்மாக்காருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதன்படி 83 மேலதிக வாக்குகளால் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பிரதி சபாநாயகராக தெரிவாகியுள்ளார்.