பாராளுமன்றத்தை சுற்றியுள்ள அனைத்து வீதிகளையும் மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பத்தரமுல்ல, பொல்துவசந்தி உள்ளிட்ட பகுதிகளின் ஊடாகவும் மற்றும் அந்தப் பகுதிகளின் ஊடாக பாராளுமன்றம் செல்லும் குறுக்கு வீதிகளையும் இவ்வாறு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்றும் நாளையும் இந்த வீதிகள் மூடப்பட்டிருக்கும் என்றும், இந்தக் காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற அலுவலக உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், பாதுகாப்பு தரப்பினரை தவிர வேறு எவருக்கும் குறித்த வீதிகளின் ஊடாக பயணிக்க அனுமதி வழங்கப்படாது என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தின் நுழைவு வீதிகளில் அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதால் எம்.பிக்களும், பாராளுமன்ற ஊழியர்களும் பாதிக்கப்படுவதாகவும், இதனாலேயே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இன்றும் நாளையும் பாராளுமன்றத்தை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு தடையுத்தரவு விதிக்குமாறு பொலிஸார் நீதிமன்றம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.