ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி அலரி மாளிகைக்கு முன்பாக நடைபாதையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கூடாரங்கள் உள்ளிட்ட அவர்களின் உடமைகளை அகற்றுமாறு பொலிஸாருக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், அலரிமாளிகைக்கு முன்னால் கொள்ளுப்பிட்டிய பகுதியில் ‘மைனாகோகம’ என பெயரிட்டு கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.
இவர்கள் நடைபாதை மறித்தும் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாகவும், இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களின் இடையூறு ஏற்படுத்தும் பொருட்களை அங்கிருந்து அகற்ற உத்தரவிடுமாறு கோரி பொலிஸார் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும் அமைதியானதும் மக்களுக்கு இடையூறு அற்றதுமான போராட்டங்களுக்கு தடை இல்லை எனவும் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுடன் பொலிஸார் அந்த இடத்திற்கு சென்ற போது, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
நடைபாதையை மறித்து நாங்கள் நிற்கவில்லை என்றும், பொலிஸாரே இரும்பு கம்பிகளை கொண்டு மறித்து தடையேற்படுத்தியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வாதிட்டனர்.
இதேவேளை பொலிஸாரினால் அங்கு நடைபாதைகளில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாககவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக மேலும் பல குழுக்களும் அங்கு சென்றிருந்தன. இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.