இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு இன்னும் 2 வருடங்களாவது செல்லும் என்று நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சிலவேளை இது 5 முதல் 10 வருடங்கள் வரை நீடிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று அமைச்சின் அறிவிப்பை வெளியிட்டு உரையாற்றும் போதே நிதி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் பெரிதும் நெருக்கடியான கட்டத்தில் இருக்கின்றது என்று கூறியுள்ள அவர், தற்போது நாட்டில் 50 மில்லியன் அமெரிக்க டொலரை விடவும் குறைவான வெளிநாட்டு நாணய கையிருப்பே இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை நாட்டின் மொத்த தேசிய வருமானம் 24 வீதத்தில் இருந்து 8.6 ஆக குறைவடைந்துள்ளதாகவும், இதனால் வருமானத்தை அதிகரிக்கக் கூடியவகையில் வரிகளை அதிகரிக்கும் வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.