இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையால் இலட்சக் கணக்கானோர் தொழில்களை இழக்கும் நிலைமை ஏற்படலாம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை வங்கித் துறையும் வீழ்ச்சியடையும் அபாயம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடத்தப்பட்ட மே தினக் கூட்டத்திலேயே ரணில் விக்கிரமசிங்க இதனை கூறியுள்ளார்.
தற்போதைய நிலைமையில், 2019 ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த மக்கள் ஆணையும், 2020 பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த மக்கள் ஆணையும் இப்போது செல்லுபடியற்றதாகியுள்ளதாகவும், முழு நாடும் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் வீட்டுக்கு போகுமாறே கூறுகின்றனர் என்றும் ரணில் விக்கிரமசிங்க இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இந்த நேரத்தில் 113 பேர் உள்ள அரசாங்கத்தினால் இந்தப் பிரச்சனையை தீர்க்க முடியுமென்று எவரும் கருதக் கூடாது என்றும், 225 பேரும் ஒன்றிணைந்தே தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.