இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தாங்கி வாகன உரிமையாளர் சங்கம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை கொண்டு செல்லும் பணிகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
நேற்று இரவு முதல் தாம் இந்தப் பணியில் இருந்து விலகியுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக தமது வாகனங்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரியே இந்தப் போரட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் வாகனங்களின் எரிபொருள் விநியோகத்திற்கான அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்படும் என்று எரிசக்தி அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனினும் தமது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காது எவ்வாறான அச்சுறுத்தல்களை விடுத்தாலும் பணிக்கு திரும்ப மாட்டோம் என்று அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருளை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் 80 வீதமானவை தனியாருக்கு சொந்தமானவையே, இதனால் இவர்கள் பணிகளில் இருந்து விலகினால் எரிபொருள் விநியோகத்தில் மேலும் நெருக்கடி ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.