November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“ஒன்றாக கைக்கோர்த்து சவாலை வெற்றி கொள்வோம்”

உழைக்கும் மக்களுக்காக அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, போராட்டத்தை மக்கள் சார்பான புரட்சிகர மாற்றத்துடன் கொண்டு செல்ல ஒன்றிணையுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உழைக்கும் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி விடுத்துள்ள மேதின செய்தியிலேயே இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அந்நியச் செலாவணி இழப்பானது பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. அவை அனைத்தையும் முகாமைத்துவம் செய்வதுதான் தற்போதைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழியாகும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமை யாரால் ஏற்படுத்தப்பட்டது என்பதைப் பின்தொடர்வதற்குப் பதிலாக, பொதுமக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதில் கவனம் செலுத்துவதுதான் இப்போது நாம் செய்ய வேண்டும்.

அதற்கான மிகவும் பொருத்தமான மற்றும் செயற்திறன்மிக்க வேலைத்திட்டத்திற்குச் சென்று மக்களின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த தொழிலாளர் தினத்தில், அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொண்டுள்ள சவாலை வெற்றிகொள்ள மக்களுக்காக  ஒருமித்த கருத்துக்கு வருமாறு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் நான் மீண்டும் ஒருமுறை அழைக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

பிரதமர் வாழ்த்து

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றாக கைக்கோர்க்க வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் போராட்டத்திற்காக உங்களுடன் கைக்கோர்த்திருந்த நான், பொறுப்பு கூற வேண்டிய சகல சந்தர்ப்பத்திலும் உங்களது உரிமைகளுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளையும் பொறுப்புகளையும் ஒருபோதும் புறக்கணித்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியை நிர்வகிப்பதற்கு இதுவரை முன்னெடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்திருப்பதுடன், தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அதற்கான ஆதரவை பெற்று வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.