அரசியலில் இருந்து ராஜபக்ஷ குடும்பம் விலக வேண்டும் என்ற அபிப்பிராயத்தை பத்தில் ஒன்பது இலங்கையர்கள் கொண்டுள்ளனர் என்று மாற்றுக் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் ஆய்வு அறிக்கை தெரிவிக்கின்றது.
இதேவேளை நாட்டில் 87 வீதமானவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதாகவும் அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் கணிப்பீட்டாய்வுப் பிரிவான ‘சோஷல் இன்டிகேட்டர்’ சமீபத்தில் நடாத்திய ஜனநாயக ஆட்சி தொடர்பான நம்பிக்கைச் சுட்டி (2வது அலை) ஆய்வின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டே குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு எதிரான பொதுமக்களின் குரலானது காலிமுகத்திடலில் நடைபெறும் எதிர்பார்பாட்டத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக அல்லாது, நாடு முழுவதும் உள்ள அனைத்து இன மற்றும் பொருளாதார குழுக்களைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியிலும் உள்ளது எனும் தகவலை அரசாங்கத்திற்கு இந்த ஆய்வு முடிவுகள் தெளிவாக தெரிவிக்கின்றது.
இலங்கை மக்களில் அதி பெரும்பான்மையானவர்கள் தற்போதைய நெருக்கடி நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
கடந்த ஒரு மாத காலத்தில் தாம் அல்லது தமது குடும்பத்தில் எவரேனும் எரிவாயு, எரிபொருள், பால்மா, உரம் அல்லது இது போன்ற ஏதேனும் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள வரிசையில் இருக்க நேர்ந்ததாக 88 வீதமான மக்கள் தெரிவிக்கின்றனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக தமது அல்லது தமது குடும்பத்தில் எவரேனும் ஒருவரின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாக பத்தில் ஒன்பது பேர் தெரிவிக்கின்றனர். இந்த நெருக்கடி நிலைமை பொதுமக்களின் ஜனநாயக குடியுரிமை சார்ந்த உணர்வை எவ்வளவு விழிப்படைய வைத்துள்ளது என்பதை ஆய்வு முடிவுகளானது காட்டுகின்றன.
கிட்டத்தட்ட அரைவாசி அளவான இலங்கை மக்கள் இலங்கை தேசத்தின் அவல நிலைக்கு காரணமானவர்களுக்கு எதிராக நடாத்தப்படுகின்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் எதேனும் ஒன்றில் அவர்கள் அல்லது அவர்களின் குடும்பத்தில் எவரேனும் பங்குபற்றியுள்ளனர்.
இந்நிலையில், சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான நெருக்கடியாகக் கொள்ளப்படும் தற்போதைய நிதி நெருக்கடிக்கு கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கமே காரணம் என நாடு முழுவதிலும் உள்ள மக்கள் ஏகமனதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
62 வீதமான இலங்கையர்கள் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தின் மீது குற்றஞ்சாட்டுகின்ற அதேவேளை 14.5 வீதம் மற்றும் 14.4 வீத சதத்தினர் முறையே சுதந்திரத்திற்குப் பின்னரான அனைத்து அரசாங்கங்களினதும் தவறான பொருளாதார முகாமைத்துவத்தின் மீதும் நாட்டின் ஊழல் மிகுந்த அரசியல் கலாச்சாரத்தின் மீதும் குற்றஞ்சாட்டுகின்றனர்.