நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணும் வரையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாளாந்தம் விநியோகிக்கப்படும் 60,000 முதல் 80,000 வரையிலான எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை இனி 30,000 ஆக குறைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடி நிலைமையில் எரிவாயுக்காக அதிகளவில் செலவு செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாகவும், இதற்காக மாதாந்தம் 30 மில்லியன் டொலர் அவசியமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தற்போதைக்கு நகர் பகுதிகளுக்கும் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கும் மாத்திரம் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை எரிவாயுக்கு பதிலாக விறகு மற்றும் எரிபொருள் அடுப்புகளை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அந்த நிறுவனம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.