சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடலுக்காக ஜனாதிபதியினால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்துள்ளது.
தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் அமைக்கப்படும் சர்வ கட்சி அரசாங்கத்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இதனால் தாம் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதியின் அழைப்பு தொடர்பில் தமது கட்சி கூடி ஆராய்ந்து இன்று மாலை இறுதி முடிவை எடுக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜே.வி.பியும், தமிழ் கட்சிகளும் இன்று மாலை தமது நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளன.
இதேவேளை அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் கட்சிகள், ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சில நிபந்தனைகளை விதித்துள்ளன.
அதாவது தமது பக்கத்தில் இருந்து அமைச்சுப் பதவிகளை பெற்றவர்களை அந்தப் பதவிகளில் இருந்து நீக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளன.
சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பில் நாளை முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் கலந்துரையாடலுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியினால் நேற்று அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.