ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் பதவி ஆசனங்களில் இருக்கும் இடைக்கால அரசாங்கத்தில் தாம் இணைந்துகொள்ள மாட்டோம் என்று ஜே.வி.பி அறிவித்துள்ளது.
இன்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அந்தக் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
முழு நாடும் கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கூறுகையில் அவர் அந்தப் பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காக பல்வேறு உத்திகளை கையாள்வதாகவும் அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் இருக்கும் நிலையில், இடைக்கால அரசாங்கத்தை அமைத்தாலும் அதனால் எந்தப் பிரயோசனமும் இருக்காது என்றும் இதனால் தாம் அதில் இணைந்துக்கொள்ள தயாராக இல்லை என்றும் ஜே.வி.பி தலைவர் கூறியுள்ளார்.