November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக சீனா உறுதியளிப்பு!

இலங்கையில் உருவாகிவரும் நிலைமையை தாம் உன்னிப்பாக  அவதானித்து வருவதாகவும், இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் சீனத் தூதுவர் கி சென்ஹொங் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை சந்தித்த போதே சீனத் தூதுவர் இதனை கூறியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது தூதுவரை வரவேற்ற அமைச்சர் பீரிஸ், இரு நாடுகளுக்கும் இடையில் முறையான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கு முன்னரே இலங்கைக்கான சீனாவின் தொடர்ச்சியான உதவிகளைப் பாராட்டியுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தை மோசமாகப் பாதித்துள்ள எரிசக்தித்  தட்டுப்பாடு குறித்தும் தூதுவருக்கு அமைச்சர் விளக்கியதுடன், இக்கட்டான நேரத்தில் நிதியமைப்பிற்கான மேலதிக உதவிகளை நல்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கொழும்பிலும் பெய்ஜிங்கிலும் உள்ள சீனத் தூதரகம் இலங்கையில் உருவாகிவரும் நிலைமையை உன்னிப்பாக  அவதானித்து வருவதாக சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

சீன அரசாங்கத்தின் நேரடி ஆதரவு, பிராந்திய அரசாங்கத்தின் ஆதரவு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் சீனாவின் ஆதரவு உட்பட சாத்தியமான எல்லா வழிகளிலும் சீன அரசாங்கம் இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என்று தூதுவர் கி உறுதியளித்துள்ளார்.

இதன்படி 5000 டொன் அரிசி (முன்னர் அறிவிக்கப்பட்ட 2000 டொன்களுடன்), மருந்துகள், உற்பத்திப் பொருட்கள் மற்றும்  ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் உட்பட, இலங்கைக்கு 200 மில்லியன் பெறுமதியான அவசர மனிதாபிமான உதவியை வழங்குவதற்கு சீனா சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனம் உறுதியளித்துள்ளது.

மேலும், யுனான் மாகாணம் 1.5 மில்லியன் ரென்மின்பி பெறுமதியான உணவுப் பொதிகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளது.