இந்தியாவிடமிருந்து மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை எதிர்பார்த்துள்ளது.
ஏற்கனவே இந்தியாவிடம் இருந்த 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை பெற்றுள்ள நிலையிலேயே இலங்கை அரசாங்கம் மேலும் நிதி உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றது.
இது இந்தியாவுடன் கலந்துரையாடி வருவதாக வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எரிபொருள் கொள்வனவுக்காகவே இந்த உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பங்களாதேஷிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலரை மீள செலுத்தும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே சீனாவுடன் தொடர்ந்தும் கலந்துரையாடல் இடம்பெறுவதாகவும் ஜப்பான், ஐக்கிய அரபு இராஜ்ஜியம், ஓமான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புகளை பெறுவது குறித்து கவனம் செலுத்தப்படவதாகவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கு தேவையான அவசர மனிதநேய உதவிகளை பெற்றுக்கொடுக்க சீனா தயாராக உள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் ட்விட்டர் பதிவினூடாக குறிப்பிட்டுள்ளது.