இலங்கையின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து, 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இன்றுடன் மூன்று வருடங்கள் ஆகின்றன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்த, காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்குமான பிரதான திருப்பலி கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியர் தேவாலயத்தில் இடம்பெற்றது.
இதனிடையே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நினைவுகூறி, பாதிக்கப்பட்டவர்களுக்கு காலை 08.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்தோடு, நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் திருப்பலி மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
மலையகத்திலுள்ள தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் நடைபெற்றதோடு, கோவில்கள், விகாரைகள், பள்ளிவாசல்களிலும் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி, வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலுள்ள 3 ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 263 பொதுமக்கள் உயிரிழந்ததோடு, 500 க்கு அதிகமானோர் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், பாராளுமன்றத்திலும் இன்று சிறிது நேரம் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியினர் கறுப்பு உடையிலும் பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.