November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”பொலிஸார் உதவி கோரினால் இராணுவம் உதவும்”

அமைதியான முறையில் போராட்டம் மேற்கொள்பவர்கள் மீது இராணுவம் அதிகாரத்தை தேவையற்ற முறையில் பயன்படுத்தாது என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வன்முறை ஏற்படும் சந்தர்ப்பத்தில் தேசத்தைப் பாதுகாப்பதற்கும், அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கும், மக்களிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் பொலிஸாரினால் உதவி கோரப்படும் சந்தர்ப்பத்தில் இராணுவம் ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் அவரது பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவொன்றுக்கு பதிலளித்து வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி நிலைமையில் சிக்கியுள்ள மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும் நிலையில், அவர்களின் போராட்டங்களை அரசாங்கத்தின் உத்தரவுகளை பின்பற்றி ஒடுக்குவதற்கு முன்னர் அது தொடர்பில் சிந்தித்து நடந்துகொள்ளுமாறு சரத் பொன்சேகா தனது பேஸ்புக் ஊடாக பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவத் தளபதிக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள பாதுகாப்பு செயலாளர், ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் அமைதியான போராட்டங்களை ஒடுக்க இராணுவப் படைகள் அனுப்பப்பட மாட்டாது என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டையும் மக்களையும் நேசிக்கும் இலங்கையின் பாதுகாப்பு படையினர் தார்மீக ரீதியில் நேர்மையானவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமைதியான முறையில் இடம்பெறும் போராட்டக்காரர்களுக்கு மத்தியில் புலனாய்வு பிரிவினர் அனுப்பப்பட்டு அவர்களில் ஊடாக வன்முறையை ஏற்படுத்தவோ அல்லது குண்டு தாக்குதல்களை மேற்கொண்டு போராட்டக்காரர்களை கலைப்பதற்கு முப்படையினர் ஈடுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என சமூக ஊடகங்கள் ஊடாக வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் வெறுமனே வதந்திகள் மாத்திரமே தவிர அதில் எவ்வித உண்மையும் கிடையாது என்றும் பாதுகாப்பு செயலாளர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகளுடன் இணைந்து நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் சட்டம், ஒழுங்கு மற்றும் பொதுமக்களைப் பாதுகாக்க முப்படைகளும் பொலிஸாரும் பொறுப்புடன் நேர்மையுடனும், மரியாதையுடனும் நியாயமான மற்றும் பக்கச்சார்பற்ற முறையில் செயற்படுவதற்காக தங்களால் முடியுமானதை செய்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.