November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”எமது அரசாங்கம் தொடரும்”

யார் பொறுப்பை ஏற்காவிடினும் ஆட்சியிலுள்ள கட்சி என்ற வகையில் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை தீர்க்க நடவடிக்கை எடுப்போம் என்று பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நெருக்கடி நிலைமையை தீர்ப்பதற்காக பாராளுமன்றத்திலுள்ள அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த போதும், எவரும் முன்வராத காரணத்தினால் அந்தப் பொறுப்பை நாங்கள் தொடருவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களுக்காக இன்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம் என நாம் சகல கட்சிகளுக்கும் அழைப்புவிடுத்தோம். ஆனால் வரவில்லை. இந்த தருணத்தில் கட்சி குறித்து சிந்திப்பதைவிட நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதே நம் அனைவரதும் பொறுப்பாகும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் யார் பொறுப்பை ஏற்காவிடினும் ஆட்சியிலுள்ள கட்சி என்ற வகையில் நாம் அந்த இறுதி பொறுப்பை ஏற்க வேண்டும். நாம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத் தருவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுடன் இணைந்து தைரியமாக பணியாற்றி, இலங்கையை கடனற்ற நாடாக மாற்றுவதற்காகவே வெளிநாடுகளிலிருந்து கடன்களை பெற்றுக்கொள்வதை இந்த அரசாங்கம் மட்டுப்படுத்தியது என்று தெரிவித்த அவர், மிகவும் இக்காட்டான சூழ்நிலைகளிலும் வெளிநாடுகளிலிருந்து உதவிகளை பெற்றுக்கொள்ளும் போது, நாட்டின் சுயாதீனத்தை பாதுகாத்து உதவிகளை பெற்றுக்கொள்வதற்கே நாம் எப்போதும் முயற்சித்தோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று நாம் முகங்கொடுத்துள்ள நெருக்கடியை வெற்றி கொள்ள பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கவே ஜனாதிபதியும், அரசாங்கமும் ஒவ்வொரு நிமிடத்தையும் செலவிட்டு வருகிறது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை என்னதான் நாட்டிற்கு நல்லது என்றாலும் சேதனப் பசளை வேலைத்திட்டத்தை கொண்டு செல்ல இது சரியான தருணம் அல்ல. அதனால் நாம் மீண்டும் உர மானியத்தை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

தாங்கிக்கொள்ள முடியாத வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்று, கடதாசி பற்றாக்குறை வரை முகங்கொடுத்து வருகின்ற இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும். இரண்டு மூன்று நாட்களில் முடியாவிடினும் கூடிய விரைவில் இந்த நெருக்கடிக்கு இட்டுச்செல்லும் பாதையை முடிவுக்கு கொண்டுவர நாம் நடவடிக்கை மேற்கொள்வோம் என்றும் உறுதியளித்தார்.

இந்த நேரத்தில் வீதியில் போராடும் ஒவ்வொரு விநாடியும் எமது நாட்டிற்கு டொலர் கிடைக்கும் சந்தர்ப்பம் இல்லாது போகின்றது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை அன்று அந்த சவால்களுக்கு முகங்கொடுத்த தைரியமும் துணிச்சலும் இன்றும் எமக்கு உள்ளது என்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.