இடைக்கால அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகள் இணங்காத நிலையில் தற்போதைய அரசாங்கத்தை தொடர்வதற்கு ஆளும் கட்சிக்குள் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவையை அமைப்பதற்கு அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.
இதன்போது கடந்த வாரத்தில் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த சிலருக்கு புதிய அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் உள்ளிட்ட 41 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே நேற்று இரவு விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தை இணக்கப்பாடு இன்றி முடிவடைந்துள்ளதாகவே கூறப்படுகின்றது.
புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று அந்த எம்.பிக்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எனினும் இதற்கு ஜனாதிபதி இணங்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.