அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்துள்ள 41 எம்.பிக்களையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்திக்கவுள்ளார்.
இன்று இரவு 7 மணிக்கு அவர்கள் அனைவரையும் சந்திக்க வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இடைக்கால அரசாங்கம் தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 10 உறுப்பினர்களும், வீரவன்ச உள்ளிட்ட 10 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 உறுப்பினர்களும், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 14 உறுப்பினர்களும் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இரண்டு உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்க முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு தீர்வாக புதிய பிரதமர் ஒருவரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தில் இருந்து விலகியவர்கள் ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவ்வாறான நிலைமயிலேயே இன்று இரவு இந்த சந்திப்பு நடக்கவுள்ளது.
எவ்வாறாயினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தாம் விரும்பவில்லை என்று எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.