File Photo
நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்து, பாராளுமன்ற ஆட்சி முறையை அமுல்படுத்துவதற்கு சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்மானம் எடுக்க வேண்டும் என தமிழ்க் கட்சிகள் சில கூட்டாக அறிவித்துள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ விடுதலை இயக்கம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியன கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை வலியுறுத்தியுள்ளன.
இலங்கை சந்தித்துள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையில் இருந்து விடுபடுவதற்கு இதுவே சரியான தீர்மானமாக இருக்கும் என்று குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை ஜனாதிபதியும் அரசாங்கமும் சகல அரசியல் கட்சிகளும் பொறுப்புணர்வோடு உரிய முறையில் கையாள வேண்டும் எனவும் அந்தக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இந்த நேரத்தில் அவசியமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்காவிடில், முழு நாடும் சீர்குலையும் அபாயம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளும் இது தொடர்பில் உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று தமிழ்க் கட்சிகள் கேட்டுக்கொண்டுள்ளன.