அரசாங்கத்திற்கு எதிராக இலங்கை முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில், பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகே பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு யுவதியொருவர் மலர் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் பாராளுமன்றம் நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்திய நிலையில், பத்தரமுல்லையில் பாராளுமன்ற சுற்றுவட்டப் பகுதியில் வீதித் தடைகளை போட்டு பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வேளையில் ரோஜா பூவுடன் பொலிஸாரிடம் சென்ற யுவதியொருவர், ”உங்களுக்கு என்னைப் போன்ற சகோதரி இருக்கலாம். இதனால் நான் கொடுக்கும் மலரை பெற்றுக்கொள்ளுங்கள்”என்று கூறி அதனை அவர்களிடம் வழங்கினார்.
இதன்போது அதனை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பெற்றுக்கொண்டார்.
இதேவேளை, மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி அந்த இடத்திற்கு வந்த போது, அங்கு ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து பொலிஸார் மாணவர்களை நோக்கி கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.