January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”நானே நாட்டின் நிதி அமைச்சர்”

நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி சமர்ப்பித்த இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

இதற்கமைய தான் தொடர்ந்தும் நிதி அமைச்சராக கடமையை தொடர்வதாக அலி சப்ரி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவை அமைச்சர்கள் இராஜினாமா செய்த போது, நீதி அமைச்சரான அலி சப்ரியும் இராஜினாமா செய்திருந்தார்.
இதனை தொடர்ந்து திங்கட்கிழமை புதிய நிதி அமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை தான் நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து ஜனாதிபதிக்கு இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இவ்வாறான நிலைமையில், பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான விவாதத்தின் போது, நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து அலி சப்ரி கருத்து வெளியிட்டார்.

இவ்வேளையில், நிதியமைச்சர் என்ற வகையிலா தாங்கள் இங்கு உரையாற்றுகிறீர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கேட்டார்.

இதற்கு பதிலளித்த அலி சப்ரி, “நிதி அமைச்சராக நான் இன்று பேசுகிறேன். இந்தப் பதவியை ஜனாதிபதி என்னிடம் கையளித்தார். என்னை விட திறமையானவர்கள் இருந்தால் இதனை ஏற்றுக் கொள்வார்கள் என்று நான் நினைத்தேன். அதற்கு யாரும் இல்லை. நான் என் தாய்நாட்டை நேசிக்கிறேன். என்ன அவமானங்கள் இருந்தாலும், எவ்வளவு கேலிக்குரியவனாக இருந்தாலும், என் நாட்டிற்காக என்னால் முடிந்ததைச் செய்வேன்” என்றார்.